திருமூலர்
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்பது நூற் கொள்கை. திருமூலர் ஒரு யோகி. ஆகவே அவர் தான் கற்ற வித்தையை உலகிற்குக் கூறுகின்றார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் அடைய முடியும் என்ற அந்த உபாயத்தைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றனர். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும். திருமூலர் காலத்துத் தமிழகத்தில் சைவசமயம் இருந்த நிலைமையை உணர இச் செய்திகள் பொருந்துணை புரிய வல்லவை.பரகாயப் பிரவேசம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அதன் பொருள். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டு நீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த செய்திகளை நாம் படிக்கிறோம். அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.
கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற யோகியார் ஒருவர், அவர் அட்டமா சித்தி பெற்றவர். அவர் அகத்தியரிடத்துக் கொண்டு நட்பால் பொதியமலை நோக்கி வந்தார். திருவாவடுதுறையை அடைந்தார். ஆங்கு இறைவரை வணங்கினார். அப்பதியினின்று அகன்று போகும் போது காவிரியாற்றின் கரையில் பசுக்கூட்டம் அழுவதைப் பார்த்தார். அப்பசுக்கள் மேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடந்தான். யோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்க எண்ணினார். தாம் பயின்ற சித்தியினால் அம்மூலன் என்பவனின் உடலில் தம் உயிரைப் புகுத்தினார். பசுக்கள் மகிழ்ந்தன. திருமூலர் மாலையில் அப்பசுக்கூட்டங்களைக் கொண்டு அவற்றின் இருப்பிடங்களில் செல்லச் செய்தார். அவை வழக்கம் காரணமாகத் தம் வீடுகளுக்குச் சென்றன. திருமூலர் ஓரிடத்தில் நின்றார். மூலன் என்ற இடையனின் மனைவி தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டு சென்றாள்! தன் கணவன் போல நின்ற யோகியாரைப் பார்த்தாள். அவர்க்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று எண்ணி அவரைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். முடியவில்லை. அதனால் மனம் கவன்று அவள் இல்லம் திரும்பினாள். அன்று இரவு கழிந்தது. மறுநாள் அவள் தன் கணவனின் நிலையைப் பலரிடம் உரைத்தாள். அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அப்போது திருமூலர் யோகத்தில் இருக்கக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று மூலனின் மனைவியிடம் உரைத்தனர். அவள் பெரிதும் துன்பம் அடைந்தாள்.
யோகத்தினின்று எழுந்து யோகியார் தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார். அது கிடைக்கவில்லை. தம் யோகவன்மையால் இறைவரின் உள்ளத்தை உணர்ந்தார். சிவாகமப் பொருளைத் திருமூர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவரின் திருவுள்ளம். அதனால் தம் உடல் இறைவரால் மறைக்கப்பட்டது என்பதை அறிந்தார். திருமூலர் சாத்தனூரிலிருந்து சென்றபோது இடையர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்க்கு அவர் உண்மையை உரைத்து, திருவாவடுதுறையை அடைந்து இறைவரை வணங்கிக் கோயிலுக்கு மேற்கில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் செய்யுளை இயற்றினார். பின் இறைவரது திருவடி நிழலை எய்தினார்.
Post a Comment