கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள்
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள்.எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம்
கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த
குழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை இடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு
செய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள். ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள் பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள்.
இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.
Post a Comment